×

சிக்கன் கடை உரிமையாளர் வங்கி கணக்கில் பணம் அபேஸ்

புதுச்சேரி, மார்ச் 4: புதுவை பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் பிரகலநாதன் (35). நைனார்மண்டபத்தில் இறைச்சி கடை வைத்துள்ளார். இவர் தனது கடை விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் பிரகலநாதன் மொபைல் போனில் பேசிய நபர், தான் ஒரு அதிகாரி என்றும், தனக்கு 30 கிலோ கோழிக்கறி வேண்டுமெனவும், இதற்கான தான் அனுப்பி வைக்கும் நபரிடம் அதை கொடுக்குமாறு தெரிவித்த அவர், இதற்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக கூறியுள்ளார்.இதை நம்பிய பிரகலநாதன் தனது வங்கி கணக்கு எண்ணை அவருக்கு அனுப்பினார். பின்னர் சிறிதுநேரத்தில் அவரை தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர், வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த முடியவில்லை. எனவே டெபிட் கார்டை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறி ராணுவ வீரர் உடை அணிந்த ஒரு படத்தை அவருக்கு அனுப்பினார்.

அதை நம்பி பிரகலநாதன், தனது டெபிட் கார்டு முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பிய நிலையில், உடனே உங்கள் போனில் வந்துள்ள ஓடிபி நம்பரை கூறுமாறு கேட்டுள்ளார். அவரும் விவரம் தெரியாமல் ஓடிபி நம்பர் குறித்த தகவலை தெரிவித்த நிலையில் அடுத்த சில நொடியில் பிரகலநாதனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகலநாதன், அந்த மர்ம நபரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது பணத்தை திரும்பத் தருமாறு கேட்ட நிலையில், அவர் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து நூதன முறையில் மோசடி நடந்திருப்பதை உணர்ந்த அவர், உடனடியாக புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் முறையிட்டார்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்ஐ கீர்த்தி வர்மன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதேபோல் மற்ற வியாபாாிகளிடமும் அந்த நபர் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதன்பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags : Chicken Shop ,Owner ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது